கிறுக்கல்கள்!
Sunday, May 13, 2018
என்னவளின் வெட்கம்
கரங்களில் முகம் கவிழ்த்து, வெட்கம் என்கிறாய்.
விரல்களினூடே விழி காட்டி வெல்கம் என்கிறாய்.
என் காதல்
உன் மீதான என் காதல்,
வானவில் அல்ல, மழை நின்றதும் கலைந்துவிட!
அது வானின் நிறம் போன்றது - எந்நாளும் நிலைத்திருக்கும்!!
உன் மீதான என் காதல், கூடல் மயக்கமல்ல, கலவி முடிந்ததும் காணாமல் போக!
அது ஊடல் உற்சாகம், உறங்கவிடாது உயிர்த்திருக்கும்!!
உன் மீதான என் காதல், தாயின் பாசமல்ல சொல்லிச் சொல்லி சோர்ந்து போக!
அது சேயின் நேசம், சொல்லாவிடினும் சிறந்திருக்கும்!!
Wednesday, August 3, 2016
பரிசு!!
பூக்கடைக்குப் போனேன்: உன் மனத்திற்கிணைய மலரில்லை - வந்துவிட்டேன்!
பொன்நகை தான் வாங்கப் போனேன்: உன் புன்னகைக்குப் பொருந்தாதென்று - வந்துவிட்டேன்!
புத்தாடை வாங்கப்போனேன்: என் வானவில்லுக்கேற்ற வண்ணமில்லை - வந்துவிட்டேன்!
வாழ்த்து அட்டை வாங்கப் போனேன்: உன் வாக்கின்முன் அவ்வாசகங்கள் வீணென்று - வந்துவிட்டேன்!
உனக்கேற்ற ஓர்பரிசு இந்த ஞாலத்தில் இல்லையென்று ஞானம் பெற்று இங்கு வந்துவிட்டேன்!
எனக்கான அரும் பரிசாய் என்வாழ்வில் வந்தவளே, உனக்கான நற் பரிசாய் நான்ஆக இதோ வந்(து)தேவிட்டேன்!!
Wednesday, January 15, 2014
ஆட்டோ பாடம்
நேற்று ஒரு சிறிய ஆட்டோ பயணம். கரூரில் வீட்டில் இருந்து பஸ் ஸ்டான்ட் வரை. ஆட்டோக்காரர் பழக்கப்பட்டவர். தன் மகளையும் அழைத்து வந்த்திருந்தார்.
ஆட்டோ ஏறியதும் நான் வழக்கம் போல் மொபைலில் மூழ்கினேன். ஆட்டோ ஏனோ தள்ளாடி நடக்கும் குடிமகன் போல் போனது. ஏன் என்று நான் கவனிக்காமல் வாட்ஸ் ஆப் ல் மெசேஜ்கள் தட்டிக்கொண்டிருந்தேன்.
சில இடங்களில் ஆட்டோ சற்றே நின்று போவது தெரிந்தது.. மொபைலில் இருந்து வெளி வந்து என்ன நடக்கிறதென்று பார்த்தேன்.
பொங்கலுக்காக வீட்டு வாசலில் போடப்பட்டிருந்த விதவிதமான கோலங்களை ஆட்டோக்காரர் தன் மகளுக்குக் காட்டிய வண்ணம் ஓட்டிக்கொண்டிருந்தார். அந்தச் சிறுமி முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி...
வாழ்வின் சிறு சிறு சந்தோஷங்களை தவறவிடுவது கூட தெரியாமல் திரியும் என் நிலை என்னை கேலி செய்தது.
மொபைலை தூர வைத்துவிட்டு, அவர்களோடு நானும் கோலங்கள் கண்டு கொண்டாடினேன்.
கடைசியாக ஒரு வீட்டின் முன் ஆட்டோ 2 நிமிடம் நின்றது. "ஐ! இத தான் சொன்னியா அப்பா?? சூப்பரா இருக்கு!" என்றாள் அந்தப் பெண்.
தரையில் கம்பீரமாக 'சோட்டா பீம்' என்னைப் பார்த்து முறுவலித்தார்!
Thursday, November 7, 2013
உறவு ஒரு வெண்ணிலவு
உறவு ஒரு வெண்ணிலவு
என் உறவு ஒரு வெண்ணிலவு!
வளர்பிறை வாழ்க்கை
தேய்பிறை துன்பம் !!
வளர்பிறை காதல்
தேய்பிறை கவலை!!
தனிமை வளர்பிறை தாளாது தங்கமே...
தவறுகள் தேய்பிறை ஆக
நின் தண்மையே நான் தேடும் தவம்.
Sunday, November 18, 2012
கவிதைத் தொடர்ச்சி
கட்டாயத்தில் வருவதல்ல கவிதை,
உன்னை கட்டவிழ்த்து வருவதே கவிதை!
நிர்பந்தத்தில் வருவதல்ல கவிதை,
ஒரு நீர்வீழ்ச்சியாய் நனைப்பதே கவிதை!!
அழகு!!
என்னுடன் இருக்கும் பொழுதுகளில் "அழகாய்" ஒளிரும் நீ,
என்னை விட்டு விடைபெறும் பொழுதுகளில் மட்டும் ஏன் "பேரழகாய்" மிளிர்கிறாய் !!
Subscribe to:
Posts (Atom)